Pages

Wednesday, 30 March 2016

கிழக்கு வாசல் படத்தின் மாபெரும் வெற்றி

தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இசைஞானி இளையராஜாவை வைத்துப் பண்ணிய வெற்றிப்படங்களில் "கிழக்கு வாசல்" பெரு வெற்றி கண்ட படமாக அமைந்து சாதனை படைத்தது. கார்த்திக், ரேவதி ஆகியோரின் சினிமாப் பயணத்தில் தவிர்க்க முடியாத படமாக இது இன்றளவும் இருக்கின்றது. "தாங்கிடத்தத்த தரிகிட தத்த" என்று சந்தம் போட்டு நெஞ்சின் கதவுகளைத் தட்டி உள்ளே சென்று உட்காரும் "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடலாகட்டும் சித்ராவின் தேன் குரலில் "வந்ததேஏஏஏஏ குங்குமம்" என்ற மெல்லிசையாகட்டும் படத்தில் மீதமுள்ள பாடிப் பறந்த கிளி உள்ளிட்ட எல்லாப் பாடல்களையும் சேர்த்து கிழக்கு வாசல் படத்தின் பாடல்கள் தங்கக் கிரீடம் சூட்டவேண்டிய தராதரம்.


"வந்ததே குங்குமம்" பாடலை இன்னொரு ஸ்பெஷல் பதிவுக்காக மனதில் ஒதுக்கி வைத்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக "பச்சமலப்பூவு நீ உச்சி மலைத் தேரு" பாடலை பாடல் ஒலி நாடாவில் இரண்டு பக்கமும் ஒலிப்பதிவு செய்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கேட்டு ரசித்ததாக அன்றைய காலகட்டத்தில் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் ஒரு மேடை நிகழ்ச்சியில் சொல்லியிருந்தது ஞாபகத்து வருகின்றது. கிழக்கு வாசல் பாடல்களில் எதை இங்கே கொடுப்பது என்று வரும் போது ஓரவஞ்சனையுடன் "பச்சமலைப் பூவு" தான் வந்து விழுகிறது. 

இளையராஜா - ஆர்.வி. உதய குமார் கூட்டணியின் வெற்றி படங்கள்

எண்பதுகளின் தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குனர்களின் பெருங்கனவாக இருந்தது இசைஞானி இளையராஜாவோடு சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்பது தான். தமிழ் சினிமாவின் முன்னணி ஏழு நட்சத்திரங்களில் இருவர் பிரபு, கார்த்திக் ஆகியோரை வைத்து ஆர்.வி.உதயகுமார் கொடுத்த படம் "உரிமை கீதம்" அந்தப் படத்துக்கு ஆபாவாணன் வழியில் இசையமைப்பாளர்கள் மனோஜ் கியானை இசைக்க வைத்தார். தொடர்ந்து "புதிய வானம்" படத்தில் சிவாஜி,சத்யராஜை இயக்கிய போதும் அவர் தேர்ந்தெடுத்தது இசையமைப்பாளர் ஹம்சலேகாவை. ஒரு படம் இடைவேளைக்குப் பின் மீண்டும் தன் வழக்கமான இரட்டை நாயகர்கள் செண்டிமெண்டில் வந்த படம் "உறுதிமொழி"


இதில் சிவகுமார், பிரபு முக்கிய நாயகர்கள். ஆர்.வி.உதயகுமாரோடு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்து வெளியே வந்து ஒளிப்பதிவாளராக இயங்கிய ரவி யாதவ், இவரின் தயாரிப்பில் வந்த படமே உறுதிமொழி. இப்போது ரவி யாதவ் முழுமையாகத் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி மும்பை சென்று விட்டார். கிழக்கு வாசல் கொடுத்த பெருங்கவனிப்போடு ஒப்பிடுகையில் உறுதிமொழி திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் இந்தப் படத்தில் வந்த "அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" பாடல் அந்த நாளில் சென்னை வானொலியில் திரைகானத்திலும், நேயர் விருப்பத்திலும் ஒலித்துத் தன் இருப்பைக் காட்டியது இன்னும் இந்த ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி கொடுத்த இந்த ஜோடிப்பாட்டை நேசிப்பவர்கள் நெஞ்சாங்கூட்டில் வைத்திருப்பர். 

Friday, 26 February 2016

‘சண்டை கோழி’இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது!


‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

2006-ம் ஆண்டு லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த விஷாலின் இரண்டாவது படம் ‘சண்டை கோழி’. மீராஜாஸ்மின் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியே தயாரித்திருந்தார்.

இப்போது லிங்குசாமி ‘ரஜினிமுருகன்’ படத்தை ரிலீஸ் செய்து பல பிரச்சினைகளில் இருந்து ரிலாக்ஸாகியிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு ‘ரஜினி முருகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே ‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இதனை ஏற்று விஷாலும் லிங்குவுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். இப்போது விஷால் ‘மருது’ படத்தில் நடித்து வருவதால் அது முடிந்தவுடன் நேரடியாக ‘சண்டை கோழி’க்கு வருவதாகவும் சொல்லியிருந்தார்.


இந்த நேரத்தில் இன்றைக்கு பிரபல சாமியாரான ரவிசங்கரை பெங்களூரில் தனது தந்தையுடன் சென்று சந்தித்து ஆசி வாங்கிய விஷால், அங்கிருந்தே டிவீட்டரில் போட்ட ஒரு செய்தி ‘சண்டை கோழி’ செய்தியை ஒரு கனவாக்கிவிட்டது.

விஷால் தன் ட்வீட்டில் “சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணியின் மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எனவே சண்டைக்கோழி படம் கைவிடப்படுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஷால் இந்தச் செய்தியில் கண்டித்திருப்பது இயக்குநர் லிங்குசாமியைத்தான் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. ஏற்கெனவே பல பணச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் லிங்குசாமிக்கு இந்தப் படத்தையும் தானே தன் பேனரிலேயே தயாரிக்க வேண்டும் என்று நிரம்ப ஆசை.

இதற்கேற்றாற்போல் பைனான்ஸ், கடன் என்று விஷாலின் பெயரை முன் வைத்து லிங்குசாமி எடுத்த அனைத்துவித முயற்சிகளையும் விஷால் விரும்பவில்லையாம். ஏற்கெனவே ஜெமினி லேப் தயாரிப்பில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ இன்னமும் ரீலீஸாக முடியாமல் தவியாய் தவிக்கிறது.

இந்த நேரத்தில் லிங்குவின் தொடர்ச்சியான இந்த கடன் வாங்கும் பிரச்சினையால் இந்தப் படமும் தொங்கலில் நின்றால், அது தனக்குத்தானே குழி வெட்டிக் கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்துதான் விஷால் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தகவல். இயக்குநர் லிங்குசாமி இதற்கென்ன கவுண்ட்டர் அட்டாக் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை..

Wednesday, 24 February 2016

இளையராஜா ஆயிரம்

இளையராஜா ஆயிரம் என்ற பெயரில் பிப்ரவரி 27 ஆம் தேதி இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோர் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா மியூசிக்மேனேஜ்மெண்ட் நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தென்னிந்திய திரையுலகமே இதில் பங்கேற்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனையும் விழாவில் கலந்துகொள்ள அழைத்துள்ளனர். ஏற்கெனவே மும்பையில் இயக்குநர் பால்கி நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்று இளையராஜாவை பாராட்டியவர் அமிதாப்.


சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவிலும் பங்கேற்க அமிதாப் ஒப்புதல் தெரிவித்துள்ளாராம். ரஜினியும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள். கமல் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். திட்டமிட்டபடி சென்னை வந்துவிட்டால் அவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். இவர்களோடு மலையாள முன்னணி நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரையும் அழைத்திருக்கிறார்களாம். தெலுங்குத் திரையுலகம் மற்றும் கன்னடத் திரையுலகத்திலிருந்தும் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர். திட்டமிட்டபடி இவர்கள் அனைவரும் பங்கேற்றால் இந்திய திரையுலகமே இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுத்த மாதிரி ஆகிவிடும்.

Want to Share This News With Friends?

Quick Search